×

மூலக்கொத்தளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான ₹70 கோடி நிலம் மீட்பு: தனியார் நிறுவனத்திற்கு சீல்வைப்பு

தண்டையார்பேட்டை, ஆக. 17: மூலக்கொத்தளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான ₹70 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்ட அதிகாரிகள், அங்கு இயங்கி வந்த தனியார் நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.மூலக்கொத்தளம் காட்பாடா பிரதான சாலையில் கோபால் நாயக்கர் அன் சன்ஸ் என்ற தனியார் நிறுவனம் 2.5 ஏக்கரில் கடந்த 130 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அதன் மதிப்பு ₹70 கோடி ஆகும். இந்த நிறுவனத்தில் டிராக்டர் உதிரி பாகம் தயாரிக்கப்படுகிறது. இங்கு 170க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

அதில் பீகார், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 55 பேரும் அடங்குவர். இந்த நிறுவனம் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வந்தது. குத்தகை முடிந்த காரணத்தால் அரசு சார்பில் அந்த இடத்தை திருப்பித் தரவேண்டும் என்று கேட்கப்பட்டது. இதனையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஹரி கிருஷ்ணன், சீனிவாசன், பாஸ்கர் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வந்தது. அந்த நிறுவனம் இடத்தை காலி செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டது.

அதன்பேரில் நேற்று காலை தண்டையார்பேட்டை ஆர்டிஓ கியூரி, தண்டையார்பேட்டை தாசில்தார் தர்மராஜ் ஆகியோர் வண்ணாரப்பேட்டை போலீசார் உதவியுடன் நிறுவனத்தில் இருந்த தொழிலாளர்களை வெளியேற்றினர். பின்னர் நிறுவனத்திற்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் அங்கு வேலை செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த 55 தொழிலாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல், அருகே உள்ள சாலையில் அமர்ந்தனர்.

The post மூலக்கொத்தளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான ₹70 கோடி நிலம் மீட்பு: தனியார் நிறுவனத்திற்கு சீல்வைப்பு appeared first on Dinakaran.

Tags : Moolakotthalam ,Thandaiyarpet ,
× RELATED குடும்ப தகராறில் விபரீதம்; கத்தியால்...